வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு....சென்னை எழும்பூரில் கைது!

சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு, சென்னை எழும்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 பிப்ரவரி 7ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மலையம்பாக்கத்தில் ரவுடி பினு, தமது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 13ம் தேதி ரவுடி பினு போலீசாரிடம் சரணடைந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். சுமார் 3 மாதம் வேலூர் சிறையில் இருந்து வந்த ரவுடி பினு, ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் 23ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் விடுக்கப்பட்டார்.

30 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் ஜாமீனில் வந்த பினு அதன் பின்னர் மாங்காடு காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வரவில்லை. அவர், தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கி இருந்து ரவுடி பினுவை அக்டோபர் 14ம் தேதி போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். எனினும், மீண்டும் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற ரவுடி பினு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளான அக்பர், மனோஜ்குமார் ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: