கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் பாரிக்கர் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

பனாஜி: கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று காலாமானார். அவருக்கு வயது 63. இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி, மும்பையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பினார். இதன்பின் அரசு நிர்வாகத்தை கவனித்த பாரிக்கர், மூக்கில் சுவாச உதவி உபகரணங்களுடன் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து மிகவும் சிரமப்பட்டு உரையாற்றினார். தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கட்சி தலைமையிடம் வலியுறுத்தியும் அவர் மாற்றப்படவில்லை. அதன்பிறகும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்ததால், அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இதற்கிடையே, கூட்டணிக் கட்சி தலைவரும் அமைச்சருமான விஜய் சர்தேசாய் நேற்று முன்தினம் முதல்வர் பாரிக்கரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பின் பேட்டி அளித்த அவர், ‘‘பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது’’ என தெரிவித்தார். பாரிக்கரின் உடல்நிலை தேற இனியும் வாய்ப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை பாஜ மேலிடம் மேற்கொள்ளத் தொடங்கியது.

இந்நிலையில், தலைநகர் பனாஜி அருகேயுள்ள டோனா பவுலாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கோவா முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் நேற்று மாலை தகவல் வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில், மாலை 6.40 மணிக்கு பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63. இவர் 4 முறை கோவா முதல்வராக பதவி வகித்துள்ளார். கடந்த 2012ல் கோவா முதல்வராக பதவியேற்ற பாரிக்கர், 2014ல் மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் 2016ல் இந்திய ராணுவம், எல்லைத்தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்கல் நடத்தியது. ரபேல் போர் விமான ஒப்பந்தமும், பாரிக்கரின் பதவிக் காலத்திலேயே கையெழுத்தானது. பின்னர், 2017ல் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர் கோவா முதல்வராக பொறுப்பேற்றார். பாரிக்கரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா ஆட்சிக்கு ஆபத்து?

கடந்த சில நாட்களுக்கு முன், கோவாவில் பாஜ எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா  இறந்ததைத் தொடர்ந்து ஆளும் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை குறைந்தது. பாஜ  எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது. தற்போது பாரிக்கரும் காலமானதைத்  தொடர்ந்து, பாஜவின் பலம் 12 ஆக சரிந்துள்ளது. ஏற்கனவே, 14 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ், தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை  சந்தித்து கடிதம் கொடுத்துள்ளது. பாரிக்கர் மறைவால், கோவாவில் பலத்தை இழந்துள்ள பாஜ, ஆட்சிக்கும் சிக்கலை எதிர்நோக்கி உள்ளது.

வாழ்க்கை வரலாறு

கோவா மாநிலம் மபுசா பகுதியில் கடந்த 1955ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மனோகர் பாரிக்கர் பிறந்தார். மர்கோவாவில் உள்ள லயோலா பள்ளியில் தனது உயர்நிலைப்பள்ளி கல்வியை முடித்தார். பாம்பே ஐஐடியில் மெட்டாராஜிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்த பாரிக்கர் பின்னர் பாஜவில் இணைந்து தீவிர பணியாற்றினார். கடந்த 1994ம் ஆண்டில் கோவா சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1999ம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாரிக்கர் முதல் முறையாக கோவா முதல்வராக தேர்வு பெற்றார்.

ஆனால் அந்த அரசு 2002 பிப்ரவரி 27ம் தேதி வரையே நீடித்தது. தொடர்ந்து கடந்த 2002 ஜூன் 5ம் தேதி மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அவர் 2005 வரையும் பின்னர் கடந்த 2012 முதல் 2014 வரையும் முதல்வராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2014 முதல் 2017ம் ஆண்டு வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி நடைபெற்ற கோவா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு உத்பால் மற்றும் அபிஜித் என்ற இரு மகன்கள் உள்ளனர். பாரிக்கரின் மனைவி மேதா பாரிக்கர் கடந்த 2001ல் மரணமடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: