பழைய போலீஸ் குடியிருப்பு பாராக செயல்படும் அவலம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பழைய போலீஸ் குடியிருப்பு மது அருந்தும் பாராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் தாலுகா காவல்நிலையம் அருகே போலீசார் வசிப்பதற்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகள் சிதிலமடைந்து போனதால் புதிய வீடுகள் கட்டித்தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தாலுகா ஸ்டேஷன் அருகிலேயே புதிய வீடுகள் கட்டப்பட்டன. தற்போது அதிலும் போலீசார் குடிபெயர்ந்து விட்டனர். ஆனால் சிதிலமடைந்த பழைய வீடுகள் இடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் இரவுநேரங்களில் இந்த வீடுகள்

சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்குகிறது. மது, சிகரெட் என ஒவ்வொரு நாளும் அத்துமீறி வருகின்றனர். மேலும் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துகளும் இங்கு முகாமிடுகின்றன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ’இந்த பழைய குடியிருப்பை பொதுப்பணித்துறையினர்தான் இடிக்க வேண்டும். இதனை அகற்றினால் குழந்தைகள் விளையாடுவதற்கு மைதானம், பூங்கா கூட அமைக்கலாம். நாங்கள் பலமுறை குடியிருப்புகளை இடிக்க கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. சமூகவிரோதிகளை கண்காணித்து விரட்டினாலும் மீண்டும் வந்து விடுகின்றனர். எனவே பழைய குடியிருப்பை அகற்றி எதற்காவது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: