விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திட்ட அனுமதியில்லாமல் விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு நல்லசாமி, நாச்சிமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 110 டாஸ்மாக் கடைகளை மூடியதற்கான அறிக்கையை மார்ச் 18ல் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்லசாமி, நாச்சிமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் தங்கள் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளதால் அதை அகற்ற உத்தரவிடுமாறு கோரியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஏன் சிசிடிவி கேமிராக்களை பொருத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் தமிழகத்தில் செயல்படும் மூன்றாயிரம் டாஸ்மாக் கடைகளில் தற்போது சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள கடைகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பதிலளித்தார். மேலும் 110 கடைகள் விவசாய நிலங்களில் திட்ட அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்க கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளதாக கூறினர். அதனால் திட்ட அனுமதி இல்லாமல் விவசாய நிலத்தில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: