பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மின்னஞ்சல், தொலைபேசி மூலம் புகார் அளித்தால் ரகசியம் காக்கப்படும்: சிபிசிஐடி உறுதி

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ரகசியமாக புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இந்த சம்பவத்தில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

குற்றவாளிகள் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் இருப்பதால் அவர்களை கைது செய்யக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இதையடுத்து  வழக்கை பொள்ளாச்சி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தனது விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கினர்.  மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை, பொள்ளாச்சி காவல் நிலைய குற்ற வழக்கானது கோவை மாவட்ட காவல்துறையில் இருந்து குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை தெற்கு மண்டல சிபிசிஐடி கண்காணிப்பாளர் நிஷா  பார்த்திபன் தலைமையில் தனிப்படை விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான விவரங்களையோ அல்லது வழக்கில் தொடர்புடைய எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களோ தங்களுக்கு தெரிந்த தகவல்களை  கூறினால் அவர்களது பெயர் மற்றும் விவரங்கள் வெளியில் வராமல் ரகசியமாக வைக்கப்படும்.

மேலும், இவ்வழக்கு தொடர்பான படங்களோ மற்றும் வீடியோக்களோ தொலைபேசி எண்:94884 42993 மற்றும்   cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கலாம். தங்களுக்கு தெரிந்த  விவரங்கள் கடிதம் மற்றும் நேரில் வந்து தெரிவிக்க விரும்பினால் “காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, எண்:800, அவிநாசி சாலை, கோயம்புத்தூர்-18 என்ற முகவரில் அணுகலாம். பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். வழக்கில் முக்கியத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன்கருதி வழக்குத் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக  வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: