பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: குற்றச்சாட்டுக்குள்ளான 196 பேர் விண்ணப்பத்ைத நிராகரிக்கலாம்

*  தகுதியானவர்களுக்கு சான்று சரிபார்க்கலாம்

*  ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்துவிட்டு மற்றவர்களை தகுதியின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2017ல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், ஒரு லட்சத்து 33,568 பேர் கலந்துகொண்டனர். தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், 196 பேர் வினாத்தாளில் முறைகேடு செய்து தேர்ச்சி பெறச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அப்போது தேர்வு நடைமுறையை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக 2018 பிப்ரவரி மாதம் 8ம் தேதி தமிழக அரசு  தெரிவித்தது.தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு சரியானது என்று தீர்ப்பளித்தார்.

 ஆனால், தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குற்றச்சாட்டு எழுந்த 196 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.ஒரே விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மாறுபட்ட உத்தரவுகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாக தேர்வெழுதியவர்கள் தரப்பிலும், மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:

  தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற தமிழக அரசின் உத்தரவு சரிதான் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேட்டில் சம்மந்தப்பட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற மற்ற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மதுரை கிளையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த நடைமுறைகளை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: