வளசரவாக்கம் இன்ஸ்பெக்டரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்வதாக போலீஸ்காரர் எழுதிய கடிதம்: வாட்ஸ் அப்பில் பரவியதால் பரபரப்பு

சென்னை: வளசரவாக்கம் ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் டார்ச்சர் செய்வதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போலீஸ்காரர் பொன்லிங்கம், உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்தவர் பொன்லிங்கம். இவர், வளசரவாக்கம் ராயலா நகர் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர், ராயலா நகர் இன்ஸ்பெக்டரின் டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக உயரதிகாரிகளுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் மற்றும் அவருக்கு பணி மாறுதல் குறித்து வந்த ஆர்டர் கடிதம் ஆகியவை நேற்று முதல் வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்களில் உலா வந்து கொண்டிருந்தது.

இது குறித்து அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐயா, நான் ராயலா நகர் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக வேலை செய்து வருகிறேன்.  இதுவரை 3 இன்ஸ்பெக்டர்களிடம் பணி புரிந்துள்ளேன். அவர்கள், மரியாதையாக குறைகளை கேட்டு நடத்தினார்கள்.  ஆனால், தற்போதுள்ள கவுதமன் இன்ஸ்பெக்டர் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக நடத்துகிறார்.

எனது தாய் உடல்நிலை சரியில்லாமல் உயிர் போகும் நிலையில் இருந்தபோது விடுமுறை கேட்டேன். ஆனால், 10 நாட்கள் இழுத்தடித்து உரிய நேரத்தில் விடுமுறை கொடுக்காமல் காலம் தாழ்த்தி கொடுத்தார். இதனால், எனது தாயை காப்பாற்ற முடியவில்லை. எனது தாயின் சாவுக்கு சரியான நேரத்தில் விடுமுறை கொடுக்காததால் இன்ஸ்பெக்டர் தான் காரணம்.

மேலும்,  விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு வந்த எனக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணி மாறுதல் வந்த பின்பும் எனக்கு ரிலீவ் ஆர்டர் கொடுக்காமல் அவதூறாக பேசிவிட்டார். இன்று 11.45 மணி வரை போராடிப் பார்த்தேன். அவமரியாதை மட்டுமே மிஞ்சியது. இதுகுறித்து உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட இருந்தேன். ஆனால், அவர்களை சந்திக்க முடியவில்லை.  மேலும், எனது தாயின் 41 வது நாள் சடங்குக்கும் விடுமுறை கொடுக்கவில்லை, பணி மாறுதலில் செல்லவும் விடாததால் மன உளைச்சல் வேதனையில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். அதற்கு முக்கிய காரணம் ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன் தான் காரணம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 இந்த கடிதம் போலீஸ் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு சென்றதையடுத்து உடனடியாக போலீஸ்காரர் பொன்லிங்கத்தை அழைத்து பேசி ராயலா நகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணி மாறுதலில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்வதாகவும், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு விடுமுறை அளிக்காமலும் பணி மாறுதலுக்கு அனுப்பாமலும் இருந்ததற்கு தற்கொலை செய்து கொள்ள போவதாக போலீஸ்காரர் ஒருவர் எழுதிய கடிதம் வாட்ஸ் அப்பில் பரவிய சம்பவம் காவல்துறையினர் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: