தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் செய்ய ஆய்வு குழு அமைப்பு: தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

சென்னை: குடும்பன் முதல் பள்ளன் வரையிலான 6 பட்டியலினத்தவரை தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்த தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பட்டியலினங்களில் இடம் பெற்றுள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் ஆகிய 6 பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டிருக்கிறார். ஒரு  குறிப்பிட்ட பிரிவினரின் பெருமையை மீட்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இவர்கள் அடிப்படையில் வேளாண்மையை தொழிலாகக் கொண்டவர்கள்; மருதநிலத்தின் பூர்வகுடி மக்கள் என்று அச்சமுதாயப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்திலேயே தங்களைப் பட்டியலினத்தில் சேர்க்க தேவேந்திரகுல வேளாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதையும் மீறி அவர்கள் அப்பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதே தங்களின் அடையாளம் என சம்பந்தப்பட்ட 6 சமூகப் பிரிவினரும் கருதுவதால், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே சரியானதாக இருக்கும். எனவே, குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று, தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: