கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் சயான், மனோஜ் ஜாமின் ரத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மனோஜ், சயான் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கோடநாடு எஸ்டேட் காவலாளி கொைல, கொள்ளை சம்பவங்களில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசியர் மேத்யூ சாமுவேல் ஒரு  ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.  இதில் அந்த சம்பவங்களில் தொடர்புடையதாக கூறப்படும் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக பேசியிருந்தனர்.

இதனால் மனோஜ், சயான் ஆகியோரின்  ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி ஊட்டி நீதிமன்றத்தில் போலீஸ் மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து இவர்களின் ஜாமினை ஊட்டி கோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து  மனோஜ், சயான் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, மத்திய குற்றப்பிரிவு வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மனுதாரர் தயாராக இருக்கிறார்கள். மேலும், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கும், மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று தவறான தகவலை சொல்லி ஊட்டி நீதிமன்றத்தில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர் என்று வாதிட்டார்.

இதையடுத்து, போலீஸ் தரப்பில் அரசு தலைமை குற்றவியல்  வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிடும்போது, மனோஜ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சயான் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மாத்யூ சாமுவேல் பிளாக் மெயில் செய்யக்கூடியவர். அவர் பிளாக்மெயில் செய்த சம்பவங்கள் பல உள்ளன.  வீடியோவை வெளியிட்டு வழக்குகளை நீர்த்துபோக செய்ய மனுதாரர்கள் இருவரும் முயற்சிக்கிறார்கள். இருவரின் பேச்சும் நீதித்துறை நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வதாக உள்ளது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது சரிதான். இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: