ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் எம்பி தேர்தல் அதிமுகவுக்கு அக்னிபரீட்சை: அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார் பேச்சு

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்திக்கும் மக்களவை தேர்தல் அதிமுகவுக்கு அக்னிபரீட்சை என்று அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார் கூறினர்.ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா, அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்கம், மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறுவது குறித்து ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனை  கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது, “வரும் மக்களவை தேர்தல் அதிமுகவுக்கு  அக்னிபரீட்சை ஆகும். 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா சாதனைகளை வீடு வீடாக  எடுத்து சொல்லி அனைத்து தொகுதிகளிலும்  வெற்றிபெற வேண்டும். அதிமுக  தனித்துவிடப்படும் என்று நினைத்தவர்களுக்கு வெற்றி கூட்டணியாக  அமைத்து காட்டியுள்ளோம்.

இந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் எதிரிகளுக்கு வேலை  இல்லாமல் போய்விடும். இந்த கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல்,  எதிர்க்கட்சிகள் அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள்.

இதற்கு தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள். 2021ம் ஆண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிதான் நடைபெறும்” என்றார்.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் வெற்றி கூட்டணியை முதல்வரும், துணை முதல்வரும் அமைத்து தந்துள்ளனர். ஜெயலலிதா ஆசியோடு தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதிமுகவோடு யாரும் கூட்டணி சேர மாட்டார்கள், தனித்து விடப்படும் என்று நினைத்தனர்.

ஆனால் பாஜ, பாமகவோடு கூட்டணி அமைந்துள்ளது. மேலும் பல கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: