நாங்குநேரி டோல்கேட்டில் பரபரப்பு அனுமதிச்சீட்டு ஸ்கேன் ஆகாததால் அரசு பஸ் 4 மணி நேரம் நிறுத்தம்

நாங்குநேரி; கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டி-கன்னியாகுமரி இடையே அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதற்கான டோல்கேட் கட்டணம், குறிப்பிட்ட வங்கியில் செலுத்தப்பட்டு பார்கோடுடன் கூடிய அடையாள ஸ்டிக்கர் அந்தந்த பஸ்களின் முகப்பில் ஒட்டப்பட்டு உள்ளது. டோல்கேட்டை கடந்து செல்லும் போது பார்கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அனுமதி சீட்டு, தானியங்கி ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஊட்டியில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு விரைவு பஸ் புறப்பட்டு வந்தது. டிரைவர் பொன்முத்து (34), கண்டக்டர் முத்துகணபதி (47) இருந்தனர். நெல்லை வழியாக நாங்குநேரி டோல்கேட்டிற்கு நேற்று காலை 6.30 மணிக்கு அந்த பஸ் வந்தது.

அப்போது தானியங்கி ஸ்கேனர் கருவி மூலம் பார்கோடு ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை. இதனால் தானியங்கி தடுப்பு திறக்கவில்லை. இதன் காரணமாக அரசு பஸ்சை, டோல்கேட்டில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. டோல்கேட் ஊழியர்கள், பார்கோடு ஸ்டிக்கர் ஸ்கேன் ஆனால் மட்டுமே தானியங்கி தடுப்பு திறக்கும் என்பதால் கட்டணம் ரூ.240 செலுத்துமாறு தெரிவித்தனர். இது தொடர்பாக டிரைவரும், கண்டக்டரும் டெப்போ மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், டோல்கேட் கட்டணத்ைத செலுத்தினால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது என கண்டிப்புடன் கூறிவிட்டனர். இதனால் டோல்கேட் ஊழியர்களுக்கும் டிரைவர், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து அரைமணி நேரம் கழித்து பயணிகள் மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து நாங்குநேரி போலீசார் சென்று டோல்கேட் ஊழியர்கள், அரசு பஸ் டிரைவர், கண்டக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபோல் கன்னியாகுமரி அரசு பணிமனை மேலாளரும், தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார். இதையடுத்து சுமார் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் அரசு பஸ், டோல்கேட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: