தமிழகம் முழுவதும் விவசாய நிலத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் எத்தனை?: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா மயிலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு:கடந்த டிசம்பர் 18ம் தேதி எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடை உள்ள  இடத்தின் வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை விவசாய  நிலத்தில் அமைத்துள்ளனர். விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி ஈரோடு கலெக்டருக்கு ஜனவரி 21ம் தேதி மனு கொடுத்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடையை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ராஜா  ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் டாஸ்மாக் மதுபான கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்றி நாளை (இன்று)  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள்  எத்தனை என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே, அதே  கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: