சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:   உடுமலையில் சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்குமாறு உத்தரவிட  கோரி விலங்குகள் நல ஆர்வலர்  முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல்  விஜய் நாராயண் ஆஜராகி, சின்னத்தம்பி யானை ஊருக்குள் சுற்றி வருவதுடன் விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. பயிர்களை சாப்பிட்டு பழகி  விட்டதால், இனி வனப்பகுதிக்குள்செல்லாது. வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முகாமில், சின்னதம்பி யானை நன்றாக பராமரிக்கப்படும். ஓரிரு மாதங்கள்  பயிற்சி அளித்து, மற்ற யானைகளுடன் நெருங்கி பழக வைக்கப்படும் என்றார்.

 இதையடுத்து நீதிபதிகள், சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பது தான் நல்லது என்று வனத்துறையும், யானைகள் நிபுணர் அறிக்கையும்  கூறுகிறது. அதனால், சின்னதம்பியை பிடிக்க தகுந்த உத்தரவை தலைமை வனப்பாதுகாவலர் பிறப்பிக்க வேண்டும்.  அந்த யானையை பிடித்து பத்திரமாக  முகாமில் அடைக்க வேண்டும். சின்னத்தம்பியை பிடிக்கும்போதும், முகாமுக்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றும்போதும் உடல் ரீதியாக எந்த பாதிப்பும்  ஏற்படுத்தக்கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். எந்த வகையிலும் உயிர் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்  என உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: