கார் மீது பைக் மோதியதை தட்டிக்கேட்டதால் கால்டாக்சி டிரைவரை தாக்கிய போலீஸ்காரர்

„* மது போதையில் அடாவடி „

* சாலை மறியலால் பரபரப்பு

வேளச்சேரி: வேளச்சேரியில் கார் மீது பைக் மோதியதை தட்டிக்கேட்டதால் கால் டாக்சி டிரைவரை காவலர் சரமாரியாக தாக்கினார்.  விழுப்புரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (24). பள்ளிக்கரணையில் தங்கி, தனியார் ஐடி நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு வேலை முடிந்து வேளச்சேரி மெயின் ரோடு வழியாக  வீட்டுக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வேளச்சேரி மேம்பாலம் அருகே வரும்போது பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணிபுரியும் காவலர் மகாவீர் (37) குடி போதையில் கார் மீது மோதிவிட்டார். உடனே ரஞ்சித்குமார்  பார்த்து வரக்கூடாதா? என்று கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மகாவீர் பைக்கை நிறுத்திவிட்டு வந்து ரஞ்சித்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் அந்த காவலர் போதையில் இருப்பது தெரியவந்தது. இதில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட  வாக்குவாதத்தில் போதையில் இருந்த காவலர் சரமாரியாக கார் டிரைவர் ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளார்.

இதை பார்த்த மற்றொர் டிரைவர் டேவிட் சாமுவேல் காரை நிறுத்திவிட்டு வந்து மகாவீரை தடுத்துள்ளார். அப்போது, சாமுவேலுக்கும் அடி விழுந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் சக டிரைவர்களுக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து  வந்த மற்ற கால்டாக்சி டிரைவர்கள் கார்களை வேளச்சேரி மெயின் சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் பயந்துபோன காவலர் மகாவீர் அங்கிருந்து நழுவ பார்த்தார். ஆனால் அவரை விடாமல் பிடித்து  வைத்துக்கொண்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு தென் சென்னை இணை கமிஷனர் மகேஷ்வரி வந்து கார் டிரைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து,  மறியல் கைவிடப்பட்டது.இதையடுத்து காவலர் மகாவீரர் மது அருந்தி இருப்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: