சென்னை: கடந்த 2017ல் நடந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன், முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக்களில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் முடிவால் நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால், தேர்வை ரத்து செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்களை தனியாக பிரித்து அவர்களின் தேர்வை மட்டும் ரத்து செய்யக்கோரியும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.