ஆதம்பாக்கம் நேதாஜி நகர் சாலையில் மேன்ஹோல் உடைந்து ராட்சத பள்ளம்: விபத்து அபாயம்

ஆலந்தூர்: மேற்கு வேளச்சேரி 177வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் நேதாஜி காலனி 2வது பிரதான தெரு முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி  நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்களை கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில்  உடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும், என பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  உடைந்த  மேன்ஹோல்கள் மீது தொடர்ச்சியாக வாகனங்கள் சென்றதால், தற்போது, சில இடங்களில் மேன்ஹோல்கள் முற்றிலும் உடைந்து சாலை நடுவே ராட்சத பள்ளம்  ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுகிறது.

இரவில் இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் மேன்ஹோல் உடைந்த பகுதியில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து சாலை நடுவில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பலர் விபத்தில்  சிக்குகின்றனர். இந்த மேன்ஹோல்களில் குப்பை விழுவதால், அடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த மேன்ஹோல்களை விரைந்து  சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: