கீரனூர் அருகே ரியல் எஸ்டேட் தகராறில் மகனுடன் தொழிலதிபர் வெட்டிக்கொலை: அதிமுக பிரமுகர், கூலிப்படையினருக்கு போலீஸ் வலைவீச்சு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள காரப்பட்டையை சேர்ந்தவர் வீராச்சாமி (60). பைனான்ஸ், பெட்ரோல் பங்க், ரியல் எஸ்டேட், சமையல் எரிவாயு டீலர் உள்ளிட்ட தொழில் செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்த குட்டார் மற்றும் களம்மாவூர் சத்திரம் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி (எ) கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே 4 ஏக்கர் இடம் வாங்கியுள்ளனர். இது தொடர்பாக தகராறில் சமரசம் ேபசுவதற்காக வீராசாமியை தனது வீட்டுக்கு மூர்த்தி அழைத்திருந்தார். இதையடுத்து வீராச்சாமி, அவரது மகன் முத்துவேல், வீராச்சாமியின் சம்மந்தி சிவசங்கு, மருமகன் ஜெயராமன் ஆகியோர் களமாவூர் சத்திரத்தில் உள்ள மூர்த்தி வீட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த கூலிப்படையினர் அவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் வீராச்சாமி, முத்துவேல், சம்மந்தி சிவசங்கு, மருமகன் ஜெயராமன்  ஆகியோரின் தலை, கழுத்தில் சரிமாரி வெட்டு விழுந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே வீராச்சாமியும், முத்துவேலும் இறந்தனர். இதையடுத்து மூர்த்தி, அவரது கூலிப்படையினர் அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீரனூர் போலீசார், சிவசங்கு, ஜெயராமன் ஆகியோரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், 4 ஏக்கர் நிலத்தை விற்பதில் கிடைக்கும் லாபத்தை சுருட்டவேண்டும் என்ற ஆசையில் அதற்கு பதிலாக தனது 8 ஏக்கர் நிலத்தை வீராசாமிக்கு பவர் எழுதி மூர்த்தி கொடுத்துள்ளார். ஆனால், 4 ஏக்கர் இடத்தை ஐஐஎம் அமைக்க அரசு ஆர்ஜிதம் செய்துவிட்டது. இதனால், பவர் எழுதி தந்த நிலத்தை தனக்கே கிரையம் செய்து தர வீராசாமி கேட்டுள்ளார். அதற்கு மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து வீராசாமியையும் அவரது மகனையும் கூலிப்படையினர் உதவியுடன் மூர்த்தி கொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: