எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா..? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : மறைந்த தலைவர்களின் நினைவாக வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எந்த திட்டத்தின் கீழ் நினைவு வளைவுகள் அமைக்கப்படுகின்றன என்பது குறித்து நாளை பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

அப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கடந்த ஜனவரி 17-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவு வளைவு அமைப்பதற்கு தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அரசியல் லாபத்துக்காகவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு நினைவு வளைவு கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் நெடுஞ்சாலை சட்ட விதிகளை மீறி கட்டப்படும் அந்த வளைவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு விசாரணையின் போது நினைவு வளைவு கட்டுவது வளர்ச்சி திட்டமா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எந்த திட்டத்தின் கீழ் நினைவு வளைவுகள் அமைக்கப்படுகின்றன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: