முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய கட்டிடங்களுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மனு

புதுடெல்லி : முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் புதிதாக கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனவச்சல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதற்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட ஏரியில் இருந்து மணல் அள்ளி வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கியது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க கோரி, பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் முல்லைப்பெரியாறு அணை பகுதிகள் தமிழகத்திற்கு 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்ட அனுமதி வழங்கியதுடன், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து அணை பகுதியில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் கேரளாவின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிதாக கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இணைப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள கட்டிடங்களையும் அகற்ற கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: