பல்லாவரம் ரேடியல் சாலையில் விதிமீறும் கட்டுமான நிறுவனங்கள்: விபத்து அபாயம்

பல்லாவரம்: சென்னை மாநகரை ஒட்டிய பல்லாவரம் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர் பகுதியாக திகழ்கிறது. பல்லாவரத்தை சுற்றிலும் ஏராளமான  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் இருபுறமும் பல அடுக்குமாடி  குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என அபரித வளர்ச்சி அடைந்து வருகிறது.பல்லாவரம் பகுதியில் ரேடியல் சாலையின் இருபுறமும் தற்போது பிரமாண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணியில் ஈடுபடும்  தனியார் கட்டுமான நிறுவனங்கள் சிஎம்டிஏ விதிகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, கட்டிட பணிகளில் டவர் கிரேன் எனும் உயர்கோபுர மின்தூக்கி பயன்படுத்தப்படுகிறது. இவை கட்டிட பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர்  இடத்துக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. இந்த கிரேன்களை பயன்படுத்த குறிப்பிட்ட சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதைமீறி கிரேன்கள் அபாயகரமான  வகையில் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் சாலையை நோக்கி ராட்சத டவர்கள் இருப்பதால், அதிக பளுவினால் எந்த நேரமும் சாலையின் குறுக்கே உடைந்து  விழும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘கட்டுமான பணிகளை கண்காணிக்க வேண்டிய சிஎம்டிஏ அதிகாரிகளோ, தங்களுக்கு அதிகபட்ச கமிஷன் தொகை  கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில், இவ்வகையான விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை. எனவே, கட்டுமானப் பணிகளின்போது இதுபோன்ற விதிமீறல்களை சிஎம்டிஏ அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிகபட்ச  அபராதம், சிறைத் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: