பொன்னையா ராமஜெயம் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரியில் சேர்க்க மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது குறித்து தமிழக அரசு மருத்துவ கவுன்சிலுக்கு புதிய கருத்துருவை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதையடுத்து, இந்த கல்லூரியில் கடந்த 2016-17ம் ஆண்டில் சேர்ந்த 108 மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்களைச் சேர்க்குமாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூடப்பட்டால் அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை அரசு பொறுப்பில் எடுத்துக்கொள்ளும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த 108 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு புதிய கருத்துருவை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும். அதை இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறைக்கு 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு 2 வாரங்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வரும் மார்ச் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: