தமிழகம் உட்பட நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து நிறுத்தம் : நிதி பற்றாக்குறையால் அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்து விலை அதிகரித்ததால், கொள்முதல் செய்யப்படவில்லை என சுகதாரத்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு இந்த திட்டத்தின்கீழ் 67 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பிப்ரவரி 3ம் தேதி இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிப்போவதற்கு என்ன காரணம்  என சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

போலியோ சொட்டு மருந்து, நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்த வேண்டியது அவசியம். மருந்து போடப்பட்ட குழந்தையின் மூச்சுகாற்று வெளியேறி அருகில் உள்ள குழந்தைகளுக்கும் பரவும். அதனால் தான் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க முடிந்தது. தமிழகத்தில் 2004ம் ஆண்டுக்கு பின் போலியோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதுமுதல் போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. தேசிய அளவில் 2011ம் ஆண்டு போலியோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. 2014ம் ஆண்டு உலக சுகதார நிறுவனம் நம் நாட்டை போலியோ இல்லாத நாடாக அங்கிகரித்தது.தமிழகத்தில் பிப்ரவரி 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிட்டது உண்மை தான். அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் வினியோகிக்கப்படும் போலியோ சொட்டு மருந்தை மத்திய சுகாதாரத்துறை வினியோகம் செய்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஒரே நாளில் சொட்டு மருந்து முகாம் நடத்த அறிவுறுத்தும். மத்திய சுகாதாரத்துறை எதற்காக போலியோ சொட்டு மருந்து அனுப்பவில்லை என்பது தொடர்பாக மாநில அரசு சார்பில் கருத்து தெரிவிக்க முடியாது. அதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிப்ரவரி 3ம் தேதி, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்காது.வேறொரு நாளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். அதுதொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சுகாதாரத்துறை உயரதிகாரி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: