பெண்கள் போல் முடிவளர்த்து மாணவிகளை கேலி கிண்டல் : பைக் ரோமியோக்களுக்கு போலீசார் கொடுத்த நூதன தண்டனை

நாகர்கோவில் : நாகரீகம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களை வித்தியாசமாக அழகுபடுத்தி கொள்கிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி வாலிபர்களும் பெண்களை கவர்வதற்காக குறிப்பாக மாணவிகளை கவர்வதற்காக காதில் கடுக்கன் போடுவது, பெண்கள் போன்று நீண்ட முடி வளர்ப்பது, இப்படி பல தோற்றங்களில் உலா வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை தொடர்ந்து ஈவ் டீசிங் செய்து வந்த மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கி உள்ளனர். மார்த்தாண்டம் பகுதியில் காலை, மாலை பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஏராளமான மாணவிகள் செல்வது வழக்கம். அந்த நேரத்தில் கல்லூரி மாணவர்கள், மற்றும் வாலிபர்கள் சிலர் பைக்கில் தவறாமல் அங்கு ஆஜராகி விடுகிறார்கள். அவர்கள் மாணவிளை பார்த்து சத்தமாக ஹாரன் அடிப்பதும், ஜொல்லு விடுவதும், வக்கணை பெயர்கள் வைத்து கிண்டலடிப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. இதில் சில வாலிபர்கள் பெண்கள் போன்று நீண்ட முடி வளர்த்தும் காதில் கடுக்கண் போட்டும் இருந்தனர். அதோடு மாணவிகளுக்கு தெரியும்படி பைக்கில் அங்கும் இங்கும் மின்னல்வேகத்தில் செல்வதும் இவர்கள் வழக்கம்.

இதுபோல் நேற்று மாலை மார்த்தாண்டத்தில் கல்லூரி முடிந்து மாணவிகள் பஸ் ஏறுவதற்காக வந்துகொண்டிருந்தனர். பைக் ரோமியோக்களும் மாணவிகள் பின்னால் தொடர்ந்து வந்தனர். இதை பார்த்த மாணவிகள், ஏன்டா இப்படி எங்க பின்னாடி லோ..லோன்னு அலையறீங்க... மொதல்ல நீங்க ஆம்பளதானான்னு செக் பண்ணிக்குங்க... எங்கள மாதிரி இப்படி முடிய வளர்த்துக்கிட்டு திரியறீங்களே... இதிலே வேற உள்ளாடை தெரியும்படி சட்டைவேறு? என்று மாணவிகள் பதிலடி கொடுத்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் 3 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர்கள் 18, 19 வயதுடையவர்கள். இதில் ஒருவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.வாலிபர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், சும்மா விடவில்லை. அவர்கள் பைக்கை பறிமுதல் செய்ததோடு, ஒழுங்காக முடிவெட்டி நாகரீகமாக உடைமாற்றி கொண்டு வந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால்தான் பைக்கை தரமுடியும் என்று நெத்தியடியாக கூறினர்.

இதனால் பதறிய அந்த வாலிபர்கள், தாங்கள் ஆசையாக வளர்த்த முடியை வெட்டச்சொல்கிறாரே என கலங்கினர். போலீசார் அதிரடியால் வேறு வழியின்றி, சரி சார்... நீங்கள் சொன்னபடி நடந்து கொள்கிறோம் என கூறி விட்டு வெளியே சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களை பார்த்த போலீசாருக்கு அவர்களை அடையாளம் காணமுடியாத அளவிற்கு ஆளே மாறிப்போயிருந்தனர். இனி பள்ளி, கல்லூரி மாணவிகள் பின்னால் சுற்றினால் பிடித்து உள்ளே போட்டு விடுவோம் என்று எச்சரித்ததோடு மன்னிப்பு கடிதம் வாங்கி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் பைக்கில் சிட்டாக பறந்து சென்றுவிட்டனர். மாணவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: