சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை இல்லை ஜெயலலிதா மரணத்தில் அவிழாத மர்ம முடிச்சுகள்: பிப்.24ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு

சென்னை: சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்தும் திட்டத்தை ஆணையம் கைவிட்டுள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 24ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் ஜெயலலிதாவின் மரணத்தில் பல முடிச்சுகள் அவிழாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் 2017 செப்டம்பர் மாதம் 25ம் தேதி அமைக்கப்பட்டது.   நீதிபதி  நவம்பர் 22ம் தேதியில் இருந்து விசாரணையை தொடங்கினார். ஆணையம் சார்பில், ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐஏஎஸ்., ஐபிஎஸ். அதிகாரிகள், அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணையில் தற்போது வரை ஜெயலலிதா மேல் சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு செல்லாமல் அழைத்து செல்லாமல் தடுத்தது யார், ஜெயலலிதா ஆஞ்சியோ சிகிச்சைக்கு சம்மதித்த நிலையில் கடைசி வரை செய்யாதது ஏன், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு இனிப்பு வகை உணவை பரிமாற சொன்னது யார், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் சிசிடிவி கேமரா பதிவை ஆப் செய்ய சொன்னது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தற்போது வரை விடைகிடைக்கவில்லை.

மேலும் அப்போலோ டாக்டர்களிடம் மறு விசாரணை நடத்தும் வகையில் ஆணையம் சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதான உத்தரவு அடுத்த வாரம் நீதிபதி பிறப்பிக்கவுள்ளார். இதற்கிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணைய தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆணையம் சார்பில் சசிகலா, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்தும் முடிவை கைவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணையை முழுமையாக முடிக்காமல் பிப்ரவரி 24ம் தேதி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆணையத்தின் இந்த முடிவிற்கு சசிகலா தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வலியுறுத்தி உள்ளது. ஆணையம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்காத பட்சத்தில் தங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்த உள்ளது.  இது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சரியான முடிவு எடுக்கவில்லை என்ற அடிப்படையில் சிலர் அளித்த வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது. இது தவறானது. இந்த குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை ரிச்சர்ட் பீலே மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். எனவே, ரிச்சர்ட் பீலே கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு காணொலி காட்சி மூலம் ரிச்சர்ட் பீலேவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. ஆனால், திடீரென்று அவரிடம் விசாரணை நடத்தும் முடிவை ஆணையம் கைவிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணையத்தின் வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக கூறினார். ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை. அப்படி இருக்கும்போது எந்த சூழ்நிலையில், எந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார் என்பதும் விசாரிக்கப்பட வேண்டும். இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் எங்கள் தரப்பில் அவரிடம் விசாரணை நடத்த வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். விசாரணையை முழுமையாக முடிக்காமல் பிப்ரவரி 24ம் தேதி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: