ஓபிஎஸ் அறையில் அதிகாலை யாகம்: தலைமை செயலகத்தில் பரபரப்பு

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையில் அதிகாலையில் யாகம் நடந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறை முதல்தளத்தில் உள்ளது. இந்த அறையில் சில மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான வேலைகள்  சில தினங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அவரது அறை புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓபிஎஸ் திடீரென தலைமை செயலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே, யாகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வேத  விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்த யாகம் நடந்தது. இதில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யாகம் முடிந்த பிறகு காலை 8.30  மணிக்கு ஓபிஎஸ் தலைமை செயலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தலைமை செயலகத்தில் முதல் தளத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறை வாஸ்து சாஸ்திரப்படி  மாற்றங்கள் செய்ய முடிவு செய்தார். அதாவது ஓ.பன்னீர்செல்வம் அறைக்கு செல்லும்போது முதலில் ஒரு ஹால் அமைந்திருக்கும். அந்த ஹாலில் இருந்து தான் அவரது அறைக்கு செல்ல முடியும். தற்போது செய்யப்பட்ட மாற்றங்கள்  அடிப்படையில் அவர் தனது அறைக்கு நேராக செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அமர்ந்திருக்கும் இடமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை பழுது பார்க்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டதால் அவரது அறையில் யாகம் நடந்தது. மற்றப்படி, வேறு எந்த  காரணமும் இல்லை.இவ்வாறு தலைமை செயலக வட்டாரங்கள் ெதரிவித்தன.

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில் யாகம் நடந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள், இது மரபு மீறல் என்றும், சட்டத்திற்கு எதிராக யாகம்  நடந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், அவர்கள், இது தொடர்பாக துணை முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தலைமை செயலகத்தில்  துணைமுதல்வர் ஓபிஎஸ் அறையில் யாகம் நடந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: