ரங்கா, ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தைத்ரோட்டம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ரங்கா, ரங்கா, கோஷத்துடன் வடம் பிடித்து தேர்  இழுத்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் மாலை நம்பெருமாள் ரங்கவிலாச மண்டபத்தில் இருந்து வெவ்வேறு  வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7ம்நாளான  18ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் நெல்லளவு கண்டருளினார். தைத்தேர் திருவிழாவின் 8ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் ரங்கவிலாச மண்டபத்தில் இருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு உள் திருவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினார். இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதற்காக நம்பெருமாள் இன்று காலை 3.45 மணிக்கு உபயநாச்சியார்களுடன் புறப்பாடாகி, தைத்தேர் மண்டபத்தை காலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் காலை 5.15 மணிக்கு திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளினார். பின்னர் 6 மணியளவில் தேர்  வடம் பிடித்து இழுக்கப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தைத்தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது. ேதரோட்டத்தை காண திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். தேர்த்திருவிழாவில் நாளை(21ம் தேதி) சப்தாவரணமும், நாளை மறுநாள் ஆளும் பல்லக்கும் நடைபெறுகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: