மெக்சிகோவில் எண்ணெய் குழாய் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. சம்பவ இடத்தில் கரிக்கட்டைகளாகவும், முழுமையாக சாம்பலாகியும் கிடக்கும் உடல்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. மெக்சிகோவில் திருடர்களால் சேதப்படுத்தப்பட்ட குழாயில் இருந்து 10 ஆயிரம் பேரல் எரிபொருள் பல அடி உயரத்துக்குப் பீறிட்டு வெளியேறியது. ஏற்கெனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் தவித்து வந்த ஹிடால்கோ மாநிலத்தின் லாஹியூலில்பன் கிராமத்தில் வசிக்கும் ஏராளமானோர் தகவல் அறிந்து அங்கு திரண்டு, கைக்குக் கிடைத்த பாத்திரங்களில், ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு போட்டி போட்டு பெட்ரோலை பிடித்தனர்.  இந்நிலையில் எண்ணெய்க் குழாயில் திடீரென தீப்பிடித்து பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு வெளிப்பட்டது. அங்கு கும்பலாக எரிபொருள் பிடித்துக் கொண்டிருந்தோர் மீது நொடிப்பொழுதில் தீ பரவ, கூட்டம் கூட்டமாக மக்கள் எரிந்து சாம்பலாகினர்.

Advertising
Advertising

முதற்கட்டமாக 20 பேர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், தீ அணைக்கப்பட்ட பின், பல உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மெக்சிகோ நேரப்படி நேற்று மாலை வரை 73 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தீயில் கருகி சாம்பலாகியது யார்? என அடையாளம் காணும் பணி தடயவியல் துறை மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் நடைபெறுகிறது. மேலும் பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 13 வயது மகன் உள்பட, சகோதரன், கணவன், தாய், மகள் என உறவுகளின் புகைப்படத்தைக் கையில் வைத்து, கண்ணீருடன் பலர் தேடி அலைகின்றனர். எண்ணெய் குழாயில் துளையிட்டு எரிபொருள் திருடி வந்தவர்களாலேயயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி ஏராளமான உயிரிழப்பையும் கண்டு மனம் வருந்தியாவது, எரிபொருள் திருடர்கள் தாங்களாகவே திருந்துவார்கள் என மெக்சிக்கோ அதிபர் லோபஸ் ஓப்ரடார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், மீறி திருடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மெக்சிக்கோ அதிபர் எச்சரித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: