தனியார் கல்வி நிறுவனங்களில் சமூக அடிப்படையில் இடஒதுக்கீடு - ராமதாஸ் வரவேற்பு

சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இம்மாத இறுதியில்  தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும்.

தனியார் கல்வி நிறுவனங்களில் இதுவரை இட ஒதுக்கீடு  வழங்கப்படாத நிலையில், இப்போது கொண்டு வரப்படவிருக்கும் இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட,  பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்ததில் பா.ம.க பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று தொடர்ந்து  வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது அது சாத்தியமாவது மகிழ்ச்சியளிக்கிறது.

மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பு சுமார் ஒன்றரை கோடி. 24 லட்சத்துக்கும் கூடுதலான பணியிடம் காலியாக உள்ளன. ஆனால், அவற்றை நிரப்ப மத்திய அரசு தயாராக இல்லை. இத்தகைய சூழலில் 6 கோடிக்கும் கூடுதலான அமைப்பு சார்ந்த  பணியிடங்களைக் கொண்ட தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதன் மூலமாகவே  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும் சமூகநீதி வழங்க முடியும். எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவுடன், தனியார்துறை வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: