அறிவியல் கண்காட்சியில் சாதனை படைத்த பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுவீடன், பின்லாந்து நாட்டுக்கு பயணம்

காடையாம்பட்டி:  அறிவியல் கண்காட்சியில் சாதனை படைத்த, அரசு பள்ளி மாணவர் சுவீடன், பின்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்கிறார். அவரை ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் வாழ்த்தினார். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி. வெல்டிங் பட்டறையில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மேகநாதன் (14), பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். மாணவருக்கு அறிவியல் ஆர்வம் அதிகம் இருந்ததை கண்டுபிடித்த ஆசிரியை விஜிலா, அறிவியல் கண்டுபிடிப்பு தொடர்பாக அவருக்கு ஊக்கமளித்தார். இதனால், மாணவர் புதியதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அப்போது விபத்தில் காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது எப்படி என யோசித்த மாணவன் அதற்கான கருவி ஒன்றை கண்டுபிடித்தார்.

கடந்த கல்வியாண்டில் போபால் தலைநகரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தன்னுடைய கண்டுபிடிப்பை பார்வைக்கு வைத்தார். மாணவர் மேகநாதன் கண்டுபிடித்த கருவி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கான தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவி. இதன் பயன் என்னவென்றால்  ஆம்புலன்ஸ் வேகமாக வரும்போது வேகத்தடை சமமான சாலையாக மாறிவிடும். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு தானாக வேகத்தடையாக மாறிவிடும். மேலும் சிக்னல்களில் ஆம்புலன்ஸ் வரும்போது மற்ற அனைத்து சிக்னல்களும் தானாக சிகப்பு நிறத்தில் எரியும். ஆம்புலன்ஸ் வாகனம் வரும் பாதையில் உள்ள சிக்னல் மட்டும் பச்சை நிறத்தில் எரியும். மேலும், மருத்துவமனை அருகில் வரும்போது மருத்துவமனையில் உள்ள அலாரம் தானாக இயங்கும். இதன்மூலம் மருத்துவமனை ஊழியர்கள்  தயாராக இருக்க உதவும். இது அனைத்தும் சென்சார் மூலம் இயங்கும் வகையில் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பில் மாணவர் ஆறாம் இடம் பிடித்தார். இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் எனவும் கூறினார். தற்போது பள்ளி கல்வித்துறை அறிவிப்பின்படி  பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுவீடன், பின்லாந்து நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 21ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் இரு நாடுகளுக்கு செல்லும் மாணவர் மேகநாதன், அங்கு 10 நாடுகளின் கலாசாரம் மற்றும் அறிவியல் சார்பான தகவல்களை தெரிந்து கொள்வதுடன், பல்வேறு கண்டுபிடிகளுக்கு அது உதவும் வகையில் கற்று வருவேன் என மாணவர் கூறியுள்ளார். வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவனை ஓமலுர் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னால் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர். பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர், வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: