கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து டெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலில் எதுவும் உண்மையில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து டெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவல் எதுவும் உண்மையில்லை. இவர்களுக்கு பின்புலமாக  உள்ளவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னணி நிர்வாகிகள்  திடீரென வந்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை சேர்ந்த 10 அதிமுக மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருகிற 17ம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள்  நிகழ்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:டெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் (நேற்று முன்தினம்), டெல்லியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி  நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை (முதல்வர்) சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. துளியும் உண்மை இல்லை. இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், இவர்களுக்கு  பின்புலமாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது சம்பந்தமாக நேற்றைய தினமே (நேற்று முன்தினம்) சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்.

கொடநாடு எஸ்டேட்டில் 24.4.2017ல் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகள் இதுவரை நீதிமன்றத்துக்கு 22 முறை  சென்று வந்துள்ளனர். நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாதவர்கள் தற்போது புதிதாக ஒரு செய்தியை சொல்லி வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார்கள். வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.  இவர்களுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் கண்டறியப்படும். இவர்கள் வெளியிட்ட செய்தியில், ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளிடத்தில் ஆவணங்களை பெற்று கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதை  எடுக்க சென்றதாகவும் அந்த வீடியோவில் கூறி உள்ளனர். ஜெயலலிதா, எந்த ஒரு நிர்வாகிகளிடமும் எந்த ஒரு ஆவணத்தையும் எப்போதும் பெற்றது கிடையாது. ஜெயலலிதாவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி  வெளியிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சி நிர்வாகிகளை தங்களது குடும்ப நிர்வாகிகளாக ஜெயலலிதா பாவித்து வந்தார். கட்சிக்காரர்களிடத்தில் அன்பாக பழகி, அவர்களுக்கு தேவையான பதவி வழங்கி அழகு  பார்க்கும் தலைவர் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்று கண்டறிந்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  விசாரணை நடைபெற்று, அதன் முடிவில் யார் யார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன்தினம் இரவே குற்றச்சாட்டு குறித்து  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடிவில்தான்  உண்மைக்கு மாறான  செய்திகளை ஏன் சொன்னார்கள் என்று தெரியவரும். நேரடியாக எங்களை அரசியலில்  எதிர்கொள்ள முடியாத, திராணியற்ற, முதுகெலும்பு இல்லாதவர்கள்தான்  இப்படிப்பட்ட குறுக்குவழியை  கையாண்டுள்ளார்கள். இந்த குற்றச்சாட்டில்  அரசியல் பின்புலம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதற்காகத்தான் வழக்கு  தொடர்ந்துள்ளோம். உண்மை வெளிச்சத்துக்கு வரும். ஜெயலலிதா மருத்துவமனையில்  இருக்கும்போதே என்று பேட்டியில்  கூறுகிறார். அப்படியென்றால், ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில்  இருக்கும்போதெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் வெளியிட்ட  செய்தியிலேயே தெரிகிறது.  இதையெல்லாம் முறையாக விசாரித்தால்தான் உண்மை  தெரியவரும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: