நல்லம்பள்ளி அருகே மாரியம்மன் கோயில் பள்ளம் தடுப்பணை புனரமைக்கும் பணி துவக்கம்

* 30 ஆண்டு கால கனவு நிறைவேறியது

தர்மபுரி : நல்லம்பள்ளி அருகே மாரியம்மன் கோயில்பள்ளம் தடுப்பணையை புனரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதன் மூலம், அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது. நல்லம்பள்ளி தாலுகாவில் நல்லம்பள்ளி, பாளையம்புதூர், தொப்பூர், பாகல்அள்ளி உள்ளிட்ட 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. தொப்பூர் கணவாய் பகுதியில் பெய்யும் மழை, பாளையம்புதூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில்பள்ளம் பகுதியில் இயற்கையாக உருவான பள்ளத்தில் தேங்கும். இந்த பகுதியில் தண்ணீர் நிரம்பும் போது, வழிந்தோடி தொப்பையாறு வழியாக சென்று காவிரியில் கலந்து வீணாகி வந்தது.

இதனால் இப்பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 1963ம் ஆண்டு, அப்போதைய நீர்வளம் மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கக்கன், தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டினார். பணிகள் முடிந்து இந்த அணை 1965ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 இந்த அணைக்கட்டில் தேங்கும் நீரால் பாளையம்புதூர், ஏலகிரி, பாகலஅள்ளி, டொக்குபோதனஅள்ளி, ஏலகிரி ஊராட்சிகளை சேர்ந்த திம்மலகுந்தி ஏரி, நாயக்கன் ஏரி, புது ஏரி, பக்கிரிஏரி, சின்னபெரமன் ஏரி, ஏலகிரி ஏரி ஆகிய 6 ஏரிகள் நீராதாரத்தை பெற்றன.

 மேலும், இதை சுற்றியுள்ள 4 ஊராட்சிகளை சேர்ந்த 157 ஹெக்டர் பரப்பில் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக, மாரியம்மன் கோயில்பள்ளம் தடுப்பணை சேதமடைந்தது. இதனால், மழை பெய்தாலும் தடுப்பணையில் தேங்காமல், மழைநீர் காவிரியில் வீணாக கலந்தது. இதனால் அணைக்கட்டின் நீர்வரத்து ஏரிகளான 6 ஏரிகளுக்கும், நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. அனைத்து ஏரிகளிலும் முட்செடிகள் வளர்ந்து மண் மேடாக மாறியது. இந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கடந்த 30ஆண்டுகளாக கலெக்டர், அமைச்சர், முதல்வரின் தனிபிரிவு என பலமுறை மனு கொடுத்து வந்தனர்.

 இதனிடையே, கடந்த ஆண்டு இந்த தடுப்பணையை பார்வையிட்ட தர்மபுரி எம்பி அன்புமணி ராமதாஸ், சீரமைக்க நிதி ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பின்னர், உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில், பாளையம்புதூர் கோயில்பள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டப்படும் என, கடந்த செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, தடுப்பணையை புனரமைக்க ₹2.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், நல்லம்பள்ளி பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது. நேற்று காலை, தடுப்பணையை புனரமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் மலர்விழி, சப் கலெக்டர் சிவனருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: