யாருக்கும் முதல் மரியாதை கிடையாது நீதிபதி தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. மதுரை, அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கலன்று தை முதல் நாளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தங்களையும் ேசர்த்துக் கொள்ள கோரி, சில மனுக்கள் தனித்தனியாக தாக்கலாகின. இந்த வழக்கில் பலர் தங்களையும் இணைத்துக் ெகாண்டனர்.விசாரணையின்போது, பலமுறை சமாதான கூட்டம் நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லையென மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. அப்போது, ‘கலெக்டர் தலைமையில் குழு அமைத்து நடத்தலாமா’ என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு கலெக்டர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சி.ராகவன் தலைமையில், வக்கீல்கள் பி.சரவணன், என்.திலீப்குமார், ஆனந்த் சந்திரசேகர் ஆகியோரை  உறுப்பினர்களாக கொண்ட அமைப்பு குழு ஐகோர்ட்டால் அமைக்கப்படுகிறது.  இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்க, வழக்கு தொடர்ந்தவர்கள் அடிப்படையில் 16 பேரை கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது.  ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நிதியை, நீதிபதி தலைமையிலான அமைப்பு குழு உரிய ரசீது கொடுத்து வசூலிக்கலாம்.

இந்த குழுவினர் மட்டுமே வங்கி கணக்கு மூலம் நிதி வசூலிக்க முடியும். இக்குழு மட்டுமே இந்தாண்டு ஜல்லிக்கட்டை நடத்தும். இதற்கென தனி வங்கி கணக்கு துவங்கி கணக்குகளை பராமரிக்க வேண்டும். இக்குழுவிற்கு கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். காளைகள் வரும் பகுதி, மருத்துவ சோதனை பகுதி, வாடிவாசல் போன்றவை அமைக்கத் தேவையான இடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கலெக்டர், போலீஸ் தரப்பில் செய்து தரவேண்டும். தேவையான அனைத்து இடங்களில் டிஎஸ்பி தலைமையில் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு மேடையில் ஆலோசனைக்குழுவினர் உள்ளிட்ட எவரும் இல்லையென்பதை ஜல்லிக்கட்டு அமைப்பு குழு உறுதிப்படுத்த வேண்டும்.

ஜல்லிகட்டு அமைப்புக்குழு, வருவாய்த்துறை மற்றும் போலீசாரைக் கொண்ட குழுவின் கூட்டத்தை ஜன. 12 (இன்று) மற்றும் ஜன. 13ல் நடத்த கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும். யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது. ஜல்லிக்கட்டை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அமைப்பு குழுவினருக்கு மதுரை விருந்தினர் மாளிகையில் அலுவலகமும், போலீஸ் பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். அரசியல் மற்றும் ஜாதி அமைப்புகளின் விளம்பரம் இருக்க கூடாது. ஜல்லிக்கட்டு முடிந்ததும் கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அலங்காநல்லூரில் 35 பேர் கொண்ட குழு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடைமுறையை மீறி ஆளுங்கட்சியினரை மட்டும் விழா குழு உறுப்பினராக சேர்த்துள்ளனர். அனைத்து தரப்பையும் சேர்த்து உரிய போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கோவிந்தராஜன் என்பவர் மனு செய்தார். இதை அவசர வழக்காக நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, எஸ்பி தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஏற்கனவே உள்ள 24 பேருடன் மேலும் 11 பேரை ேசர்த்து 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை மனுதாரர் தரப்பில் உறுதி படுத்தினர். இதையடுத்து மனு முடித்து வைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: