அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் மேற்கூரை இல்லாத பஸ் நிறுத்தம்

அம்பத்தூர்:  அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பஸ் நிறுத்தம் பராமரிப்பு இன்றி நிழற்குடை, மின்விளக்குகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் பயணிகள் வெயில், மழையில் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிகுப்பம் பஸ் நிறுத்தத்தை கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர், வி.பி.நகர், காந்தி நகர், முத்தமிழ்நகர், பால விநாயகர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பள்ளி மாணவ மாணவிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள், கூலித்தொழிலாளிகள் இந்த பேருந்து நிறுத்தம் வாயிலாக அதிகளவில் சென்று வருகின்றனர்.

இந்த பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக நிழற்குடை இல்லாமல் இருந்ததால் மழை மற்றும் வெயிலால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கள்ளிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று, அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பஸ் நிறுத்தத்தில் இரும்பு மற்றும் இரும்பாலான நிழற்குடையை அமைத்தது. இதில் பயணிகள் அமர இருக்கைகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்த பேருந்து நிறுத்தத்தை நாளடைவில் மாநகராட்சி அதிகாரிகள் பராமரிக்காமல் கைவிட்டதால் நிழற்குடையின் மேற்கூரை உடைந்தும், மின்விளக்குகள் இல்லாமலும் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கள்ளிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் கூரை, மின்விளக்குகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிறுத்தம் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனை அடுத்து, பயணிகள்  அச்சத்துடன் பஸ்  வருகைக்காக காத்திருக்கின்றனர். அப்போது பெண் பயணிகளிடம் குடிமகன்கள் போதையில்  தகராறு செய்து வருகின்றனர். மேலும், சமூக விரோதிகள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் செல்போனை வழிப்பறி செய்கின்றனர்.

நிழற்குடையின் மேற்கூரை உடைந்து கிடப்பதால் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும்  நிழற்குடை உட்பகுதியில் உடைந்த அலங்கார விளக்குகளின் பகுதியில் அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதனால், நிழற்குடை அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகாரளித்தும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் நிழற்குடை இருந்தும் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. எனவே, கள்ளிக்குப்பம் பஸ் நிறுத்த நிழற்குடையை மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: