செம்பாக்கம் நகராட்சியில் கட்டி முடித்த சில நாளிலேயே உடைந்தது மழைநீர் கால்வாய்

தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சியில் கட்டப்பட்ட சில நாட்களுக்குள் மழைநீர் கால்வாய் கல்வெட்டு உடைந்து விழுந்தது. தரமற்ற கட்டுமன பணியே இதற்கு காரணம், என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, கலைவாணி தெருவில் செம்பாக்கம் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது.

இப்பகுதி மக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, அடிப்படை தேவைகள் மற்றும் புகார் தெரிவிக்க தினசரி நகராட்சி அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்த கலைவாணி தெரு, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையுடன் இணையும் சந்திப்பில், கடந்த சில மாதங்களுக்கு முன், மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கல்வெட்டு அமைக்கும் பணி தொடங்கியது.

ஆனால், தொடர்ந்து பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், நகராட்சி அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் இந்த சந்திப்பு வழியாக செல்ல முடியாமல், அருகில் உள்ள பஜனை கோயில் தெரு வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.

மேலும், கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்தது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புகள், பேருந்து நிறுத்தத்திற்கு வருபவர்கள், கடைக்காரர்கள் என அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் வெளியானது. அதன்பேரில், கிடப்பில் போடப்பட்ட கால்வாய் கல்வெட்டு பணி மீண்டும் தொடங்கி, சமீபத்தில் முடிக்கப்பட்டது.

ஆனால், தரமற்ற கட்டுமான பணியால், கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே கால்வாய் கல்வெட்டின் கான்கிரீட் இடி ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைநீர் கால்வாய் கல்வெட்டு கட்டுமான பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது குறித்து நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் இந்த பணியை மீண்டும் மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு கல்வெட்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், தரமற்ற கட்டுமான பணியால் அந்த கல்வெட்டின் கான்கிரீட் உடைந்து விழுந்துள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால், அலட்சியமாக பதிலளிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: