நூற்றாண்டுகள் பழமையான ஹுமாயூன் மகால் புனரமைப்புக்கு டெண்டர் எடுக்க போட்டா போட்டி பிப்ரவரியில் பணிகளை தொடங்க முடிவு

சென்னை: நூற்றாண்டுகள் பழமையான ஹுமாயூன் மகால் புனரமைப்புக்கு டெண்டர் எடுக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி முதல் கட்டுமான பணிகளை தொடங்க பொதுப்பணித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் நூற்றாண்டுகள் பழமையான ஹுமாயூன் மகால் கட்டிடம் கடந்த 2012ல் ஏற்பட்ட தீ விபத்தை ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2013ல் கட்டிடத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த சமூக நலத்துறை அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, அந்த கட்டிடங்களை புனரமைக்க கடந்த 2014ல் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு சார்பில், திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் பேரில், ₹14 கோடி நிதியுதவி செய்ய அரசு முன்வரவில்லை. இதனால் ஹூமாயூன் மகால் புனரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், ஹூமாயூன் மகால் கட்டிடம் உட்பகுதி இடிந்து, கட்டிடம் தனது பலத்தை இழந்து ஒட்டுமொத்தமாக கட்டிடத்தை இடிக்கும் சூழல் உருவானது. இதனால், அந்த கட்டிடத்தை இடித்து அதில் புதிதாக அடுக்குமாடி கொண்ட அரசு அலுவலகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் பழமையான கட்டிடங்களை புனரமைப்பு பணி மேற்கொள்ள வசதியாக பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க கோட்ட அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கோட்டத்தின் மூலம் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைப்பதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் இறங்கியது. தொடர்ந்து, கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன் தலைமையில் செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் மீண்டும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த அறிக்கை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ₹36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 18ம் தேதி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. வரும் ஜனவரி 21ம் தேதியுடன் ஒப்பந்தம் விட கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் தற்போது வரை 5 ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில் மேலும், பல நிறுவனங்கள் விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதில், குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள நிறுவனத்திற்கு டெண்டர் தரப்படுகிறது. இதை தொடர்ந்து பிப்ரவரி முதல் புனரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: