தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சிநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்த நாமக்கல் நகரில் மையப்பகுதியில், நரசிம்மசாமி, நாமகிரி அம்மனை இரு கைகூப்பி வணங்கியபடி 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். மார்கழி திங்கள் அமாவாசை அன்று அனுமன் அவதரித்தார். அந்த நாள் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அனுமன்ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே நீண்டவரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

காலை 11 மணிக்கு பால், தயிர் பல்வேறு வாசனை திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஜெயந்தி விழாவையொட்டி ஒரு டன் மலர்களால் ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் அமைந்துள்ள கோட்டை சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. கோயில் வளாகம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: