அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க செக் குடியரசு நாட்டினர் 55 பேர் சதுரகிரி வருகை

வத்திராயிருப்பு : சதுரகிரியில் இன்று நடக்கும் மார்கழி அமாவாசை வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 55 பேர் சதுரகிரிக்கு வந்துள்ளனர். இவர்களில் சிலர் மாலை அணிந்து சபரிமலைக்கும் செல்ல உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், இன்று மார்கழி அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக செக் குடியரசு நாட்டை சேர்ந்த 33 பெண்கள், 22 ஆண்கள் என 55 பேர் வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை 11 மணியளவில் தாணிப்பாறை அடிவாரம் வந்தனர். இவர்களுக்கு தலைவராக தாமஸ் பைப்பர் உள்ளார்.

 முன்னதாக தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் இருந்த கடைகளில் சாம்பிராணி, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்களை வாங்கினர். அப்போது சாம்பிராணி குறித்து கடைக்காரரிடம் கேட்டறிந்தனர். இவர்களின் பேக்குகளில் பாலித்தீன் கேரிப்பை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என வனத்துறையினர் சோதனை செய்னர். பின்னர் மலைப்பாதை வழியாக ‘அரோகரா’ கோஷம் போட்டு சதுரகிரி கோயிலுக்குச் சென்றனர்.

இதுகுறித்து தாமஸ் பைப்பர் கூறுகையில், ‘‘கடந்த மாதம் 26ம் தேதி தமிழகம் வந்தோம். தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் நவக்கிரக கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தோம். ராமேஸ்வரத்தில் எங்கள் முன்னோருக்கு திதி கொடுத்தோம். பின்னர் கன்னியாகுமரி சென்று தரிசனம் செய்தோம். குற்றாலத்தில் குளித்துவிட்டு, சதுரகிரி வந்துள்ளோம். இங்கு தரிசனத்தை முடித்துவிட்டு, சபரிமலைக்கு செல்ல உள்ளோம். இதற்காக 42 பேர் மாலை போட்டுள்ளோம். எங்கள் பெண்களுக்கு சபரிமலை கோயிலில் அனுமதி கிடைக்குமா என தெரியவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா வந்து செல்கிறோம்.

கடந்தாண்டு வெள்ளியங்கிரி மலைக்கு சென்றோம். நான் 40 ஆண்டுகளாக ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய சீடர்களும் மனைவி, குழந்தைகளுடன் வந்துள்ளனர்,’’ என்றார். இவர்களை கியூ பிராஞ்ச் போலீசார் கண்காணித்து தகவல்களை சேகரித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘வெளிநாட்டினர் போர்வையில் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்க கூடாது என்பதற்காக கண்காணித்து வருகிறோம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: