சிக்கல், சவாலை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு பெரும் துணையாக உள்ளது: புத்தக காட்சியை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு

சென்னை: சிக்கல், சாவலை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு பெரும் துணையாக உள்ளது என புத்தக காட்சியை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 42வது சென்னை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்து கொண்டார். புத்தக காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: இளமையில்தான் மிகச் சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும்.  பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக் கொள்வதைவிட, பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாகக் கற்றுக் கொள்கிறார்கள்.  

 எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.  ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம்  பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. சிக்கல், சாவலை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு பெரும் துணையாக உள்ளது  தமிழக அரசால்  தற்போது 4622 நூலகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 8 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள்    கைவசம் உள்ளன.  8 கோடியே 49 லட்சம் வாசகர்கள் இந்நூலகங்களை பயன்படுத்துகின்றனர். மக்களிடம்  புத்தகம் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது.   பொதுவாக ஆண்டுதோறும் 10 அல்லது 12 நாட்கள் நடைபெறும் இந்தக் புத்தக காட்சி   இந்த ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள் முதல் 20ஆம்  நாள் வரை 17 நாட்கள் நடைபெறுவது புத்தகங்களை விரும்பி படிக்கும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: