கடன் வாங்குபவர்கள் வெளிநாடு தப்பிச்செல்லாமலிருக்க பாஸ்போர்ட்டை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க, கடன் பெறுபவர்கள், தங்கள் பாஸ்போர்ட்டை  வங்கிகளிடம்  ஒப்படைக்கும் வகையில்  விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, நிலையூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் மங்கலம், அரசின் அனுமதி பெறாமல் அதே ஊரை சேர்ந்த ராக்கம்மாள் என்பவரின் பாஸ்போர்ட்டை  பயன்படுத்தி சிங்கப்பூருக்கு சென்று வந்ததாக கூறி,  பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் அமர்த்த கோரி மங்கலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்து. வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதிகள், பகுதி நேர ஊழியரான அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொருந்தாது.  மனுதாரர் தொடர்ந்து பல நாட்கள் பணிக்கு வரவில்லை. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கும்படி கோருவதற்கு எந்த உரிமையும்  மனுதாரருக்கு  இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சென்னையில் தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பகுதி நேர பணியாளராக இருந்தாலும் பணியில் அர்ப்பணிப்பு மனப்பான்மை இருக்க வேண்டும். விருப்பமில்லாத வேலையை செய்வதற்கு பதில் அந்தப் பணியிலிருந்து  விலகுவதே சிறந்ததாக இருக்கும்.

 ஏற்கனவே, இதே வழக்கை தொடர்ந்து மனுதாரர் வாபஸ் பெற்றுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் உயர் நீதிமன்றம் பிடிவாரண்டும் பிறப்பித்தது.  எனவே, பொய்யான நோக்கத்துடன் அவர் இந்த நீதிமன்றத்தை  அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளது மனுதாரரின் ஊரில் உள்ளவர்களின் சாட்சியத்தில் ெதளிவாகியுள்ளது. எனவே, போலி பாஸ்போர்ட் மூலம்  வெளிநாடு சென்ற மனுதாரருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை  தடுக்க, கடன் பெறுபவர்கள், தங்கள் பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பிக்கும் வகையில் விதிகளில்  திருத்தம் கொண்டு வர வேண்டும்.

 கடனை திருப்பி செலுத்தும் வரை பாஸ்போர்ட் திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், குறித்த காலத்துக்குள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால்  பாஸ்போர்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்க  வேண்டும். பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் வங்கிகளில் ஒப்புதலையும் பெற வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்....

ரேஷன் அட்டை பறிமுதல், அரசு சலுகைகள் ரத்து

மேலும் அங்கன்வாடி பெண் மங்கலம் வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அவரை சம்பந்தப்பட்ட போலீசார் கைது  செய்து சிறையிலடைக்க வேண்டும் அந்த பெண்ணின்  பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய  வேண்டும். அதேபோல மனுதாரர் மற்றும் அவருக்கு பாஸ்போர்ட் கொடுத்து உடந்தையாக  செயல்பட்ட உறவினரின் ரேஷன் கார்டை திரும்ப பெற வேண்டும். அவர்களுக்கு அரசு   உதவிகள் வழங்க கூடாது. அவர்கள் இருவரின் குடும்ப உறுப்பினர்கள் சலுகைகள்  பெற எந்த தடையும் இல்லை. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: