மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதற்காக, ஒரு ஐஜி, ஒரு டிஐஜி, 10 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவ. 16ம் தேதி திறக்கப்பட்டது. 17ம் தேதி முதல் மண்டல கால பூஜை நடந்தது. 47 நாட்கள் நீண்ட மண்டல காலம் கடந்த 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று மாலை நடை சாத்தப்பட்டது. சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் சர்ச்சை ஏற்பட்டதால், இந்தாண்டு பக்தர்கள் வருகை குறைந்தது. இதனால் கோயில் வருமானமும் பெருமளவு குறைந்தது.

இந்நிலையில், மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். இதன்பிறகு, வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை (31ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி நடைபெறும். அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். பின்னர், 20ம் தேதி காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்தாண்டு மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடையும். 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 18ம் தேதியுடன் நெய்யபிஷேகம் நிறைவடையும்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஒரு ஐஜி, ஒரு டிஐஜி, 10 எஸ்பி.க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் இன்று முதல் ஜனவரி 16ம் தேதி வரை பாதுகாப்பு பணியை தொடர்வார்கள். பம்பை மற்றும் சன்னிதானத்தில் ஐ.ஜி. பல்ராம்குமார் உபாத்யாயா தலைமையிலும், நிலக்கல், வடசேரிகரை, எரிமேலி ஆகிய இடங்களில் டி.ஐ.ஜி. சஞ்சய்குமார் தலைைமயிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சன்னிதானம், பம்பை, எரிமேலி, மரக்கூட்டம் ஆகிய பகுதிகளில் 10 எஸ்பி.க்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதவிர அதிவேக அதிரடிப்படை போலீசாரும், கமாண்டோ வீரர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: