பூம்புகாரில் சிதிலமடைந்து கிடக்கும் பயணியர் விடுதி சீரமைத்து பயன்பாட்டிற்கு விடப்படுமா?

பூம்புகார் : நாகை மாவட்டம், பூம்புகாரில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் பயணியர் விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டுெமன சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரும் ஒன்று.  இங்கு அமாவாசையில் அதிக  எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து இரவு தங்கி மறுநாள் காலையில் சங்கமத்துறையில் திதி கொடுத்து செல்வர். மேலும் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் புகழ் பெற்ற நவக்கிரக தலங்களான கீழப்பெரும்பள்ளம் கேது கோயிலும், 5 கி.மீ  தொலைவில் திருவெண்காடு புதன் கோயிலும் உள்ளது. இதனால் பூம்புகார் வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்பவர்கள் தங்கி செல்ல சுற்றுலா கழகம் சார்பில் குறைந்த வாடகையில் பயணியர் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 மட்டுமே வசூலிக்கப்பட்டது.  இதனால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து தங்கி சென்றனர்.  சுற்றுலா வளர்ச்சி கழக பொறுப்பிற்கு மாற்றப்பட்ட பிறகு ஒரு ஆண்டு கூட சரிவர பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இங்கு வரும் பயணிகள் அருகில் உள்ள தருமகுளத்தில் அதிக வாடகை கொடுத்து தங்கி வரும் நிலை உள்ளது.  விடுதி பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் சமூக விரோத செயல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அச்சமும் நிலவுகிறது.    

இது குறித்து ஊட்டியில் இருந்து பூம்புகாருக்கு சுற்றுலா வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நெடுமாறன் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு பிறகு பூம்புகாருக்கு நண்பர்களுடன் வந்துள்ளேன்.  பூம்புகாரை பார்க்கும்போது மிகவும் வேதனை அளிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் இவ்வாறு சீரழிந்து வருவதை கண்டு மிகவும் வேதனை அடைகிறோம். இந்த பயணியர் விடுதி எங்களை போல் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த விடுதி பயன்பாட்டில் இல்லாததால் அருகில் உள்ள தருமகுளத்தில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.  இப்போது இந்த கட்டிடம் பாழடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.  

கட்டிடத்தை சுற்றி காடு போல் மரங்கள் வளர்ந்துள்ளதால் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.  சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் உடனடியாக இதில் அக்கறை எடுத்து இந்த பயணியர் விடுதியை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் எங்களை போன்ற சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.  இதை சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம் என்று மிகவும் வேதனையுடன் கூறினர்.  

சுற்றுலா வந்த குடும்ப தலைவி ஜெயந்தி கூறுகையில், சுற்றுலா வரும் நாங்கள் இந்த விடுதியில் தங்கி அருகில் உள்ள கேது ஸ்தலம், புதன் ஸ்தலத்தை தரிசித்து செல்வோம்.  விடுதி பயன்பாட்டில் இல்லாததால் அதிக வாடகை கொடுத்து தங்க  முடியாமல் உடனடியாக புறப்பட வேண்டிய நிலை உள்ளது.  மேலும் தருமகுளத்தில் உள்ள ரூம்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாமல் கூட்டத்தை பார்த்து வாடகையை ஏற்றுகின்றனர்.

மேலும் பூம்புகாரில் பொது கழிப்பிடம் இல்லாமல் கட்டண கழிப்பிடமே செயல்பட்டு வருகிறது. இது எங்களை போன்ற பெண்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.  பயணியர் விடுதி விரைவில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மிகவும் ஆதங்கத்துடன் கூறினார்.  எனவே இந்த பயணியர் விடுதியை சீர் செய்து விரைவில் செயல்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: