பணி முடிந்து பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து அரசு டாக்டர் படுகாயம்

சென்னை: சென்னை கொளத்தூர் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (37). இவர், அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இதயலேகா. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ேநற்று முன்தினம் மாலை சரவணன் பணி முடிந்ததும் ஹெல்மெட் அணிந்து கொண்டு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரம்பூர் லோகோ பிரிட்ஜ் அருகே சென்றபோது, மாஞ்சா நூல் மூலம் சிலர் பட்டம் விட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பைக்கில் வந்து கொண்டிருந்த சரவணன் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டு அறுத்தது. அவர் ரத்த வெள்ளத்தில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சரவணன் கழுத்தை அறுத்த மாஞ்சா நூலை அப்புறப்படுத்தி ரயில்வே மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்தனர். மாஞ்சா நூல் அறுத்ததில் கழுத்தில் ஆழமாக காயம் ஏற்பட்டதால் 6 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டாக்டர் சவரணன் ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மூலம் யார் பட்டம் விட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால் பல இடங்களில் மாஞ்சா நூலால் பட்டங்கள் விடப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சில மாதங்களாக மாஞ்சா நூலால் பட்டம் விடும் சம்பவம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மாஞ்சா நூலால் டாக்டர் ஒருவரின் கழுத்து அறுபட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: