பச்சையப்பன் அறக்கட்டளையை நிர்வகிக்க மூவர் குழு: நிர்வாக குழு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன், வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர்கள். பச்சையப்பன் அறக்கட்டளை தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த அறக்கட்டளைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டு அவரது கண்காணிப்பில் அறக்கட்டளை நிர்வாகம் இயங்கி வருகிறது. தர்மம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட பச்சையப்பன் அறக்கட்டளையின் நோக்கம் தற்போது முற்றிலுமாக வணிக ரீதியாக மாறியுள்ளது.

அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பச்சையப்பன் மற்றம் கந்தசாமி நாயுடு கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு உயர் நீதிமன்றத்திடமிருந்து எவ்வித முன்அனுமதியும் பெறவில்லை. அதேபோல காலியிடங்கள் கடைகளாக மாறிவருகின்றன. இவ்வாறு திருமண மண்டபங்கள் மற்றும் கடைகள் கட்டுவதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக இடைக்கால நிர்வாகியும், அறக்கட்டளையின் நிதி நிலைமை மோசமான நிலையில் உள்ளதாக தணிக்கை அதிகாரிகளும் அறிக்கை அளித்துள்ளனர்.

எனவே இந்த அறக்கட்டளையை நிர்வகிக்க மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும். அதேபோல அறக்கட்டளை நிர்வாகம் தொடர்பான விதிமுறைகளிலும் தகுந்த சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இது தொடர்பாக பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகக்குழு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: