குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஏரியில் மூழ்கி மாணவன் உட்பட 2 பேர் பலி: மணலி அருகே சோகம்

திருவொற்றியூர்: மணலி அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி  கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மணலி அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திகேயன் (17). மணலில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். திருவொற்றியூர் பூங்காவனபுரம் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பானு. கார்த்திகேயன் குடும்பமும், நாகராஜ் குடும்பமும் உறவினர்கள். நேற்று  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நாகராஜ் அவரது மனைவி பானு ஆகியோர் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அருகே உள்ள சிவன் கோயிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும்  வீட்டுக்கு வந்தனர். அதன் பிறகு அரியலூர் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக இரு குடும்பத்தினர் உள்பட சுமார் 10க்கும் மேற்பட்டோர் சென்றனர். கார்த்திகேயன், நாகராஜ் இருவரும் ஏரியில் குளித்துக்கொண்டிருக்க மற்ற அனைவரும் கரை ஓரத்தில் அமர்ந்து இவர்கள் குளிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் திடீரென ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி தத்தளித்தனர். இதைப் பார்த்து கரையில் இருந்த உறவினர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அதன்பேரில் மணலி, செங்குன்றம் ஆகிய பகுதியில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் கிராம மக்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடி, இருவரையும் சடலமாக மீட்டனர். சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், நாகராஜ் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: