கட்டி முடித்து 2 ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு திறக்காமல் பாழாகும் சமூக நலக்கூடம்: மேடவாக்கம் மக்கள் வேதனை

வேளச்சேரி: மேடவாக்கம் ஊராட்சி 6வது வார்டு மந்தவெளி தெரு, ராமதாஸ் தெரு சந்திப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் சமூக நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது.  ஆனால், கட்டி  முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் இரவு நேரங்களில் காரில் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடனே வசிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மேடவாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் திருமண மண்டபங்கள் பல லட்சம் வாடகைக்கு விடப்படுவதால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை சிரமப்பட்டு நடத்த வேண்டி உள்ளது.

இந்த சமூக நலக்கூடம் கட்ட துவங்கியபோது, அப்பகுதி மக்கள் குறைந்த வாடகையில்  சமூக  நலக்கூடம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில்  இருந்தனர். ஆனால் இன்னமும் திறப்புவிழா நடத்தாமல் கிடப்பில்  போட்டுள்ளதால் தற்போது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று கடந்த 2 கிராம சபைகளில் பொதுமக்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் இங்கு குளியலறை மற்றும் கழிவறைகள் கட்டப்படாமல் உள்ளது. இங்கு சமூக நலக்கூடம் கட்ட ஆர்வம் காட்டிய அதிமுகவினர், கட்டி முடிக்கப்பட்ட சமூகநல கூடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட ஏனோ?  ஆர்வம் காட்டாமல் உள்ளனர்’’  என்றனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: