ஸ்டெர்லைட் ஆலை குறித்து முக்கிய முடிவு? தமிழக அமைச்சரவை 24ல் கூடுகிறது: பேரவை கூட்டம் குறித்தும் முடிவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை தொடர்ந்து 24ம் தேதி (நாளை மறுதினம்) தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இதில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும், சட்டப்பேரவை கூட்டம் குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் இறந்தனர்.  இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக அரசு மே 24ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இது சம்பந்தமாக அரசாணையையும் வெளியிட்டது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர், தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையையும் கூட்டி தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் அரசாணை ஐநா சபை வரை செல்லுபடியாகும் என்று கிண்டலாக தெரிவித்தார்.இந்தநிலையில்தான், கடந்த 21ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ம் தேதி (நாளை மறுதினம்) கூடுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 24ம் தேதி மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று நேற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வழக்கமாக ஜனவரி மாதம் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். இதற்கு முன்னதாக அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்து கவர்னருக்கு சட்டப்பேரவை கூடுவது பற்றி அமைச்சரவை சார்பில் அனுமதி கோரப்படும். அதற்கான கூட்டம்தான் 24ம் தேதி நடக்கிறது. அநேகமாக, ஜனவரி 2வது வாரம் பேரவை கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் முதல்நாள் கவர்னர் உரை ஆற்றுவார். மேலும், அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை, மேகதாது பிரச்னை, 7 பேர் விடுதலை உள்ளிட்ட சில முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: