மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட்!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி சாஹேத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான ருத்ரா பில்ட்வெல் ரியாலிட்டி நிறுவனத்தின் வர்த்தக தூதுவராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர்களான முகேஷ் குராணா, கவுதம் மேத்தா ஆகியோர் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும், குறித்த நேரத்தில் வீடுகளை கட்டித்தரவில்லை என்று 17 முதலீட்டாளர்கள் போலீஸில் புகார் தெரிவித்து, டெல்லி சாஹேத் மாநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இதில் ரியல் எஸ்டேட் நிறுவனர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து, விளம்பரங்களில் நடித்து தூதுவராக செயல்பட்ட கம்பீருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீது முன்பு விசாரணை நடத்திய நீதிமன்றம், கவுதம் கம்பீருக்கு நேரில் ஆஜராகும்படி பலமுறை சம்மன்கள் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, கவுதம் கம்பீருக்கு புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், இந்த வழக்கு மாஜிஸ்திரேட் மணீஷ் குராணா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் கவுதம் கம்பீர் நேரில் ஆஜராகவில்லை. இதனால், கவுதம் கம்பீர் நேரில் ஏன் நேரில் ஆஜராகவில்லை என்று நீதிபதி குராணா கேள்வி எழுப்பினார். அதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் பதில் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கவுதம் கம்பீருக்கு எதிராக ரூ.10,000 தொகையில் பிணையுடன் ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: