காது வழியாக மூளை வெளியேறிய நோயாளிக்கு நவீன அறுவை சிகிச்சை : அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: காது வழியே மூளை வெளியே வந்த நோயாளிக்கு நவீன அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது: ஈரோட்டை சேர்ந்தவர் லோகநாதன் (54), தனியார் நிறுவனத்தின் கணக்கு தணிக்கையாளர். இவர் கடந்த 2010ல் சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அதன்பிறகு அடிக்கடி தலைவலி, வலது காது வலி என பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில், எந்த மருத்துவமனையிலும் தீர்வு கிடைக்காததால், லோகநாதன் சென்னை ஓம்.எம்.ஆரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு காது, மூக்கு, தொண்டை துறை மருத்துவர் கிருஷ்ணகுமார் அவரை பரிசோதனை செய்தார். அதில் காதில் இருந்து வருவது நீர் அல்ல, அது காதின் மேல் சுவரில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துளையின் வழியே மூளையின் சிறு பகுதி இடம் பெயர்ந்து இருப்பதும், நீரும் மூளையில் இருந்து வந்ததுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஜாய் வர்கீஸ் என்பவரிடம் கலந்து ஆலோசித்து, சிகிச்சை மேற்கொண்டார். அதில் காதுக்கு மேலே மண்டை ஓட்டில் உள்ள சிறு பகுதியை பிரித்தெடுத்து, காதுக்கும், மூளைக்கும் இடையே ஏற்பட்டு இருந்த 10 மில்லி மீட்டர் நீளமும், 6 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட துளையை கவனமாக அடைத்தனர். மேலும் காது வழியே வந்திருந்த திசுவையும் கவனமாக அகற்றி, நீண்ட நாட்களாக கடும் அவதியடைந்து வந்த 54 வயது உடைய லோகநாதனை காப்பாற்றினார்கள். இந்த சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:  லோகநாதனுக்கும் எங்களுக்கும் இது மிகவும் முக்கியமான அறுவை சிகிச்சை. 8 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்தோம். மேலும் காது வழியே நீர் வருவது போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் பெரிய விளைவு ஏற்பட கூடும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: