கடலோர பகுதிகளில் பிடிபடும் கனவாய் மீன்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் பிடிபடும் கனவாய் மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் கடலோர பகுதியில் மீன்பிடி தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததால் பலர் இத்தொழிலை செய்து வருகின்றனர். மீன்களில் குறைந்த அளவு லாபம் கிடைப்பதால், விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் விலை உயர்ந்த இறால், கனவாய் மீன்களை பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் கடல் சீதோஷ்ண நிலையை பொருத்து படகு ஒன்றுக்கு 20 முதல் 50 கிலோ வரை இறால், கனவாய் மீன்கள் கிடைக்கிறது.

இதுதவிர உதிரியாக கிடைக்கும் மீன்கள், நண்டுகள், திருக்கை மீன்கள் போன்றவற்றையும் தனியாக மீனவர்கள் விற்பனை செய்கின்றனர். இதில் கனவாய், இறால், நண்டுகள் ஆகியவற்றை ரகம் வாரியாக பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இப்பகுதியில் பல தனியார் மீன் கம்பெனிகள் உள்ளன.

இவைகளில் கனவாய், இறால் மீன்கள் மீன் கம்பெனிகளால் அதிக விலைகொடுத்து வாங்கப்படுவதால் இம்மீன்களுக்கு எப்போதும் கிராக்கி அதிகம். கனவாய்களில் ஊசி கனவாய், ஓட்டு கனவாய், பேக் கனவாய் என பல ரகங்கள் உண்டு.

நிலைமைக்கு ஏற்ப இவைகளின் விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். பொதுவாக ஊசி கனவாய் ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் ஓட்டு கனவாய் ரூ.120 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடலில் கிடைக்கும் இந்த மீன்களை மீனவர்களிடமிருந்து வாங்கும் மீன் கம்பெனி உரிமையாளர்கள் அவற்றை கை, கால், விரல், கூந்தல், சதை என  தனித்தனியாக பிரிக்கின்றனர். பின்னர் ரகம் வாரியாக தனித்தனியாக ஒரு கிலோ அளவில் பேக்கிங் செய்யப்படுகின்றன. இவற்றின் சதைகள் எலும்புகள் இல்லாத நிலையில் உள்ளதால் வெளிநாடுகளில் இவற்றின் விற்பனை பன்மடங்காக உள்ளது. பதப்படுத்தப்பட்ட இவைகள் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரளா, சென்னைக்கு அனுப்பப்பட்டு பின்னர் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அரபு நாடுகள், ஐப்பான், மலேசியா போன்ற நாடுகளில் அதிக விலைக்கு இவைகள் வாங்கப்படுவதாக மீன்கம்பெனி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: