நடைமேடையில் ஆதரவற்றோர் தஞ்சம் குடிமகன்கள் கூடாரமாக மாறிய கீழ்க்கட்டளை பேருந்து நிலையம்

ஆலந்தூர்: பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளையில் மாநகர பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தி.நகர், பாரிமுனை, தாம்பரம், பூந்தமல்லி, வேளச்சேரி  போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சுற்றுப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினசரி இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், இரவு நேரத்தில் குடிமகன்கள் பேருந்து நிலையத்தினுள் அமர்ந்து மது அருந்துவதுடன், காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு செல்வதால், எங்கு பார்த்தாலும் காலி பாட்டில்களாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு மது அருந்தும் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால், இரவு நேரத்தில் பயணிகள் பஸ் நிலையத்தினுள் வர அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் பஸ் நிலையத்தினுள் வர அச்சப்பட்டு சாலையிலேயே பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.

பஸ் நிலைய இருக்கைகள் மற்றும் நடைமேடையில் பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோர் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இவர்கள், அங்கேயே சிறுநீர் கழிப்பது, அதே இடத்தில் தூங்குவது, குப்பைகளை வீசுவது என அசுத்தம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘பஸ் நிலையத்தின் நடைமேடை, இருக்கைகளை ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள் நிரந்தரமாக ஆக்கிரமித்து வசிப்பிடமாக மாற்றி உள்ளனர். இரவு நேரங்களில் குடிமகன்கள் பஸ் நிலையத்தினுள் அமர்ந்து மது அருந்துவதால், உள்ளே செல்லவே அச்சமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பெண் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பஸ் நிலையத்தில் உள்ள ஆதரவற்றோரை மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவில் குடிமகன்கள் பஸ் நிலையத்தினுள் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க வேண்டும். பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: